

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 5, 6-வது வார்டுகளுக்கு உட்பட்ட இணைப்பு பகுதியில், ஜின்னா மைதானத்தை ஒட்டி முகம்மதிய நகர் உள்ளது. அங்கு 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், நீண்டகாலமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘இப்பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். குடிநீர், கழிவுநீர் கால்வாய், கான்கிரீட் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குடியிருப்பில் பார்த்தீனியம் செடிகள் புதர்போல மண்டிக் கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடிவீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
எங்கள் கோரிக்கைகள் மீதுஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டிக்கும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம். இதன் மூலமாக, நியாயமானகோரிக்கைகள் முன்னெடுக்கப் படும் என நம்புகிறோம்’’ என்றனர்.
சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று, பொதுமக்களின் கோரிக்கை குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.