

சென்னை: சென்னை மாநகராட்சி 137-வது வார்டுக்கு உட்பட்ட ராமசாமி சாலையில் நேற்று காலை துப்புரவுப் பணியாளர் அம்மு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் கிடந்த பையை எடுத்துப் பார்த்துள்ளார். அதில், வெள்ளியால் செய்யப்பட்ட, சூலம் ஏந்திய அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து துப்புரவு ஆய்வாளரிடம் அம்மு தெரிவித்தார். அங்கு வந்த துப்புரவு ஆய்வாளர் வெள்ளி சிலையை, கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அது யாருடையது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதைத் தடுக்கும் பணியில் மாநில தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சாலையோரத்தில் வெள்ளி சிலை கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.