Published : 09 Feb 2022 07:45 AM
Last Updated : 09 Feb 2022 07:45 AM
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி பங்கேற்று, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் பகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்துப் பேசியதாவது:
திமுகவின் கடந்த 9 மாத ஆட்சி மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உள்ளாட்சித் துறை மூலமாகத்தான் செயல்படுத்த முடியும். திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதேபோல, புதிதாக எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கால்வாய்களில் தூர் வாரவில்லை. அவ்வாறு தூர்வாரி இருந்தால், சென்னையில் எப்படி தண்ணீர் தேங்கும்?
திமுக அரசு மழைக் காலங்களில் கவனக்குறைவாக இருந்து விட்டது. ஆனால், திட்டமிட்டு அதிமுக மீது குற்றம்சாட்டினர். சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டபோது திமுக எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்கவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் வாங்க வைத்துள்ளனர். தமிழ்நாட்டு மக்களை சந்திக்கதிமுகவினர் அச்சப்படுகின்றனர். அம்மா உணவகம் என்ற அற்புதமான, லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு அளித்த மகத்தானதிட்டத்தை முடக்கப் பார்க்கின்றனர். பணியாளர்கள், உணவகத்துக்கு தேவையான பொருட்களை குறைத்து வருகின்றனர். இதற்கு,மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் தரமில்லாத பொருட்களை மக்களுக்கு அளித்து, ரூ.500 கோடி வரை ஊழல் செய்துள்ளனர்.
திமுக சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது. இவர்களுக்கு மக்கள் தக்க பாடத்தை இந்த தேர்தலில் வழங்க வேண்டும். சென்னைமாநகராட்சி அதிமுகவின் கோட்டைஎன்று நிருபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT