Published : 09 Feb 2022 08:39 AM
Last Updated : 09 Feb 2022 08:39 AM

அரசுப் பேருந்து பயணவழி உணவகங்கள் நிறுத்தம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி

தமிழக அரசுப் பேருந்துகளில் நெடுந்தூரம்பயணிக்கும் பயணிகள், பேருந்து நிறுத்தப் படும் பயண வழி உணவகங்களில் தான் சாப்பிட வேண்டும் என்ற நிலை இருந்தது. அதோடு தரமற்ற உணவுகளையும், குளிர்பானங் களையும் மும்மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இயற்கை உபாதை கழிப்பதற்கான கட்டணத்தை ரூ.10 வரை வசூலிப்பது மட்டுமின்றி, அதற்கான இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பது போன்ற துயரங்களை பயணிகள் சந்திப்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உடந்தையாக இருப்பது தொடர் பாக விமர்சனங்கள் எழுந்தன.

நெடுஞ்சாலைகளில் இருக்கும் சில தனியார் உணவகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பதாக பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக மாமண்டூரில் உள்ள பயணவழி உணவகத்திலும், விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வரும் 5 உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இளங் கோவன் தலைமையில் போக்குவரத்துக்கழக அலுவலர்கள் குழு, நெடுஞ்சாலை தனியார் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து உணவகங்களில் அரசுப்பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்ட தோடு, மேற்கண்ட உணவகங்களின் அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் நிறுத்துவ தற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அரசுப் பேருந்துகள் எந்ததெந்த பயணவழி உணவகங்களில் நிறுத்தப்பட வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டு, அதன்படி தான் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என ஓட்டுநர்களுக்கும், போக்கு வரத்துக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த இரு தினங்களாக நெடுந்தூரம் செல்லும் பேருந்துகள் உயர்தர சைவ உணவகங்களில் நிறுத்தப்பட்டு பயணிகள் உணவருந்திச் செல்கின்றனர்.

இதுதொடர்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உளுந்தூர்பேட்டையில் உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சென்னை - திருவனந்தபுரம் பேருந்து பயணிகளிடம் கேட்டபோது, “மகிழ்ச்சியாக இருக்கிறது. சிற்றுண்டிகள் அதிகபட்ச விலையை விட கூடுதலாக விற்கப்படுவதில்லை. நெடுந் தொலைவு பயணிக்கிறோம். அப்படி இருக் கையில் பெரும்பாலும் சைவ உணவே அருந்துவோம். தற்போது சுகாதாரமான உணவு கிடைக் கிறது. கழிப்பறை சுத்தமாக இருப்பதோடு, அவற்றுக்கு கட்டணமும் வசூலிப்பதில்லை” என்றனர்.

அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநர் பார்த்தி பனிடம் கேட்டபோது, “எங்களுக்கு அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம். உண்மையில் பயணிகளுக்கும் மகிழ்ச்சி, எங்களுக்கும் மகிழ்ச்சி” என்றார்.

சில நாட்கள் இதை நடைமுறைப் படுத்திவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடக்கூடாது என்றும் பயணிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x