Published : 09 Feb 2022 08:45 AM
Last Updated : 09 Feb 2022 08:45 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றியைத் தாருங்கள் நல்லாட்சியைத் தருகிறோம்: காணொலி பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கடலூரில் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காணொலி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர்.

கடலூர்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஊர்கள் தோறும் அக்கட்சியின் பிரச்சார கூட்டங்களில் பேசி வருகிறார்.

நேற்று மாலை கடலூர் கிழக்கு மாவட்ட பகுதியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட இடங்களுக்கான திமுக பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. இதில், ‘உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசி யதாவது:

இன்றைய நாள் தமிழக வரலாற் றில் மட்டுமல்ல, என்னுடைய வாழ்க் கையிலும் மிக முக்கியமான நாள். இன்று (நேற்று) காலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி இருக்கிறோம். அதை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்திருக்கிறோம்.

அரியலூர் அனிதா தொடங்கி பல இளம் மாணவ, மாணவிகளின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்த பலிபீடம்தான் நீட் தேர்வு.

‘நீட் தேர்வு’ என்ற சதித் தேர்வைதலையாட்டி ஏற்றுக் கொண்டால், அடுத்து பொறியியல் கல்லூரிகளுக் கும், கலைக் கல்லூரிகளுக்கும் இது மாதிரி தேர்வைக் கொண்டு வரு வார்கள்.

அவர்கள் கொண்டு வரும் புதியகல்விக் கொள்கை என்பதே மாணவர் களை வடிகட்டுவதற்காகக் கொண்டு வரும் திட்டம்தான். ஒட்டுமொத்தமாக ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து கல்வி உரிமையைப் பறிப் பதற்காகத்தான் இது போன்ற கல் விக் கொள்கைகளை அமல்படுத்த துடிக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத் துக்குப் பின்னால் போராடிப் பெற்ற சமூகநீதியை நாம் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத் தர மாட்டோம் என்பதன் அடையாளமாகத்தான் இன்றைய தினம் நீட் விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி இருக் கிறோம்.

கரோனா கால கட்டுப்பாட்டால் காணொலி மூலமாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடலூரே வெள்ளத்தால் மிதந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், கடலூருக்கு ஓடோடி வந்தேன். நானும் அமைச்சர் பன்னீர்செல்வமும், வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டோம். ஆட்சி மாறிய பிறகு கடந்த நவம்பர் மாதத்தில் மழை ஏற்பட்டபோதும், கடலூருக்கு வந்து மழை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டேன்.

8 மாத ஆட்சியில்

இந்த 8 மாத ஆட்சியில், நெய் வேலி சுரங்கம் 2-இல் இருந்து வெளியேற்றப்படும் நீரினை ஆதாரமாகக் கொண்டு திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி, கங்கை கொண்டான் பேரூராட்சிகள் மற்றும் விருத்தாசலம், மங்களூர், நல்லூர் ஒன்றியம் சார்ந்த 625 ஊர்க் குடியிருப்புகளுக்குமான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ. 479 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிதம்பரம் நகராட்சி மற்றும் அண்ணாமலை பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ. 127 கோடியில் திட்டப்பணிகள் தீட்டப்பட்டு வருகிறது. கெடிலம் ஆற்றில் வெள்ளப் பாதிப்புகளைச் சரி செய்ய ரூ.80 கோடியில் திட்டப்பணிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. பெண்ணையாறு வெள்ளப் பாதிப்புகளைச் சரி செய்ய ரூ.135 கோடியில் திட்டப்பணிகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.

‘தமிழ்நாட்டுக்கு எந்த நன்மை யையும் செய்ய மாட்டோம்’ என்று அடம்பிடிக்கும் அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது. ஆட்சியை இழந்த ஆற்றாமையில் நித்தமும் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார் முன்னாள் முதல்வர் பழனிசாமி. ‘அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம்’ என்று பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். 2011 முதல் 2021 வரை பத்தாண்டு காலம் ஆட்சியில் அவர்கள் தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர்கள் எங்களை பார்த்து குறை சொல்கிறார்கள்.

நீங்கள் உங்கள் வாக்குகளைத் தாருங்கள்! நாங்கள் உங்களுக்குத் தொடர்ந்து நல்லாட்சியைத் தருகிறோம் என்று கூறினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x