

தேமுதிகவும் விவசாயிகளுக்கு ஆதரவாக 05.04.2016 அன்று நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்கிறது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உழவன் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும். அனைவருக்கும் உணவு படைக்கும் விவசாயிகளின் நிலை தமிழகத்தில் பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. அடை மழையாலும், கடும் வறட்சியாலும் விவசாயிகள் தொடர்ந்து பாதித்துவருகின்றனர். அதன் விளைவாக விவசாயிகள் பெற்ற கடனை திரும்பச் செலுத்த இயலாமல் தவித்து வருகின்றனர்.
ஆனால் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகள் கொடுத்த கடனுக்காக விவசாயிகளிடம் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவதாலும், அவர்களின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நெருக்குதல் கொடுப்பதாலும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மத்திய, மாநில அரசுகள் ஜப்தி நடவடிக்கைகளையும், நெருக்குதல் கொடுப்பதையும் உடனடியாக கைவிடவேண்டுமென்றும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மேலே குறிப்பிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகமெங்கும் வருகின்ற 05.04.2016 செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது. அப்போராட்டத்தில் தேமுதிகவும் கலந்துகொள்ள வேண்டுமென விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில், தேமுதிகவும் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்கிறது.
எனவே தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், விவசாயிகளின் நலனுக்காக அவரவர் இடங்களில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு அப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.