

திமுக விளம்பர அரசியல், விளம்பர நிர்வாகத்தை நடத்தி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி னார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். வேலூர் அலமேலு மங்காபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள ஏழை, எளியவர்கள் பயன் பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
கடந்த 10 மாத கால திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக மாறி இருக்கிறது. அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை முழுமையாக நிறை வேற்ற முடியவில்லை. மகளிருக்கு 1,000 ரூபாய் தருவோம் என்றார்கள்? என்றால் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்றார்கள். கடந்த 2010-ம் ஆண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சர் காந்திசெல்வன்தான் நீட் தேர்வுக் கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
இவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டு திமுக பகல் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் போட்ட விதையால் தான் இன்றைக்கு அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களின் டாக்டர் கனவு பறிபோய் கொண் டிருக்கிறது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு அளித்த 7.5 விழுக்காடு உள் இட ஒதுக் கீட்டின் காரணமாக இன்று 531 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தான் ஒரு நல்ல அரசு செய்யக்கூடிய வேலை. நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமன்றத்தில் நாமும் தீர்மானம் போட்டோம். அது ஆளுநருக்கு அனுப்பி ஜனாதிபதிக்கு சென்றது ஆனால் அங்கு மறுக்கப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் சட்டமன்றத்தில் நாமும் சேர்ந்து ஏக மனதாக தீர்மானம் இயற்றினோம். ஆளுநர் சில விளக்கங்களைக் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார். உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு உள்ளது.
ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தந்தால் அவர் மறு பரிசீலனை செய்து டெல்லிக்கு அனுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதுதான் முறைப்படி ஒரு அரசு செய்யக்கூடிய பணி. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறினர். பெட்ரோல், டீசலுக்கான விலையை உங்களால் குறைக்கவும் முடியாது. ஏனென்றால் யாருக்கும் நிர்வாகத் திறமை கிடையாது.
நீங்கள் விளம்பர அரசியல், விளம்பர நிர்வாகம் செய்து வருகின்றீர்கள். எந்த திட்டத்தையும் நீங்கள் நிறை வேற்றாததால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்’’ என்றார்.