

கிராமப் புறங்களில் பரப்புரைக் கூட்டங்களை நடத்த தடை விதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதையும், தேர்தல் பரப்புரையில் அனைத்துத் தரப்பினருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில் தான் நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், நடத்தை விதிகள் என்ற பெயரில் பரப்புரையில் சமவாய்ப்பு கிடைப்பதை சிதைக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டு வருவது கண்டிக்கத் தக்கதாகும்.
சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் பாமக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பதால் அவர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடன் கிராமப் பகுதிகளுக்கு சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு பரப்புரை செய்து வருகிறேன்.
ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரச்சாரம் மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதி சித்தேரியில் இன்று நடைபெறவுள்ள பரப்புரைப் பொதுக் கூட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி வெங்கந்தூர் என்ற இடத்தில் நாளை மறுநாள் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பரப்புரைக் கூட்டத்திற்கும் அனுமதி அளிக்க தேர்தல் அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதற்காக அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் காரணம் விசித்திரமாகவும், வேடிக்கையாகவும் ஏற்க முடியாததாகவும் இருக்கிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் அதிகபட்சமாக 5 கிராமங்களில் மட்டும் தான் பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி அளிப்பதென முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த கிராமங்களைத் தவிர வேறு எங்கும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கும் எதிரானது.
''ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்கள் ஆட்சி ஆகும்'' என்று ஜனநாயகம் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் அளித்த வரையரையை உலகிலுள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. அவ்வாறு இருக்கும் போது மக்களாட்சி அமைக்கும் நடைமுறையில் மக்களை சந்திக்க விதிகளின் பெயரில் அனுமதி மறுப்பதை எப்படி ஏற்க முடியும்?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1a) பிரிவு கருத்து தெரிவிக்கும் உரிமையையும், பேசும் உரிமையையும் வழங்குகிறது. 19(1b) பிரிவு எந்த ஒரு இடத்திலும் அமைதியாக கூடும் உரிமையை வழங்குகிறது. அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள நடத்தை விதிகளில் எந்த ஒரு இடத்திலும் ஒரு தொகுதியில் 5 இடங்களில் மட்டும் தான் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடியும் என்று கூறப்பட வில்லை. அவ்வாறு இருக்கும் போது எந்த அடிப்படையில் இத்தகைய கட்டுப்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் விதிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் வாக்குப்பதிவுக்கு இரு நாட்கள் முன்னதாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து மற்ற கட்சிகளை முடக்கிப் போட்டதுடன், ஆளுங் கட்சியினர் மட்டும் வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஆணையமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதேபோன்று ஆளுங் கட்சியினர் மட்டும் விதிகளை மதிக்காமல் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்ய அனுமதித்து, மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பாமக தலைவர்கள் மக்களை சந்திப்பதை தடுக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்தக் கட்டுப்பாடு நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போக்குவரத்துக்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கூட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், கிராமப் புறங்களில் இத்தகைய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது எனும் போது தேவையில்லாமல் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏன் விதிக்கப்படுகின்றன? என்பது தான் எங்களின் வினா ஆகும். தமிழகத்தில் பல தொகுதிகளில் முழுக்க முழுக்க கிராமங்கள் தான் உள்ளன, சில தொகுதிகளில் ஓரிரு பேரூராட்சிகளும் மீதமுள்ள பகுதிகள் கிராமங்களாகவும் உள்ளன. அவ்வாறு இருக்கும் போது மக்கள் அதிகம் வசிக்காத 5 இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்தால் மற்ற கிராமங்களில் வாழும் மக்களை எப்படி அணுகுவது? என்ற அடிப்படையைக் கூட அறியாமல் இத்தகைய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதிக்கக் கூடாது. இது ஜனநாயகத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது.
இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை பாமக தலைவர் ஜி.கே.மணி அண்மையில் சந்தித்து மனு அளித்தார். அதையேற்ற தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி, கிராமப் பகுதிகளில் அரசியல் கட்சிகள் விரும்பிய இடங்களில் பரப்புரைக் கூட்டம் நடத்த அனுமதிக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், அதற்குப் பிறகும் தொகுதி தேர்தல் அதிகாரிகள் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பதைப் பார்க்கும் போது அவர்கள் ஆளுங் கட்சியினரின் கைப்பாவையாக மாறி எதிர்க்கட்சிகளை முடக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.
கிராமப் புறங்களில் பரப்புரைக் கூட்டங்களை நடத்த தடை விதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு அர்த்தமற்ற இந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். அனைத்துக் கிராமங்களிலும் மக்களுக்கு பாதிப்பின்றி கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.