Published : 09 Feb 2022 08:13 AM
Last Updated : 09 Feb 2022 08:13 AM
திருவண்ணாமலை: திமுக வேட்பாளர் மூலம் தனது உயிருக்கு ஆபத்து என வந்தவாசி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முஸ்தபாவுக்கு, 10-வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நாகூர் மீரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, நகராட்சி பொறியாளர் உஷாராணியிடம் அவர் நேற்று அளித்துள்ள மனுவில், “வந்தவாசி தர்மராஜா கோயில் தெருவில் வசித்து வருகிறேன். “நான், வந்தவாசி நகராட்சி 10-வது வார்டு பகுதியில், ஏற்கெனவே போட்டியிட்டு நகராட்சி உறுப்பினராக வெற்றி பெற்று மக்கள் பணியை நல்ல முறையில் செய்து வந்துள்ளேன்.
இந்நிலையில், வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வந்தவாசி நகராட்சி 10-வது வார்டில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். நான், வேட்பு மனுவை தாக்கல் செய்த நாள் முதல், திமுக நகர பொறுப்பாளர் ஜலால் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வேட்பு மனுவை திரும்பப் பெற வேண்டும் என என்னிடமும், எனது மகனிடமும் மிரட்டி வருகின்றனர். 10-வது வார்டில் போட்டியிடும் நான்தான், நகராட்சி தலைவர் வேட்பாளர் என கூறி திமுக பிரமுகர் ஜலால் மிரட்டுகிறார். வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், குண்டர்கள் மூலம் பிரச்சினை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனநாயகம் காக்கவும், தேர்தல் அமைதியாக நடைபெறவும், 10-வது வார்டுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆர்சிஎம் மேல்நிலை பள்ளியில் உள்ள எனது வாக்குச்சாவடியை பதற்றமான வாக்குச்சாவடியாக அறிவித்து, பாதுகாப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்கும், எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்பட்டால், திமுக பிரமுகர் ஜலால் உள்ளிட்டவர்களே காரணமாகும். வாக்குச்சாவடி வளாகம் முழுவதும் வீடியோ கேமரா பொருத்தி, வாக்குப்பதிவை கண்காணிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார். மனு கொடுக்க அவர் சென்றபோது, பணி காரணமாக நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான முஸ்தபா வெளியே சென்று இருந்ததால், நகராட்சி பொறியாளரிடம் மனு அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT