Published : 23 Jun 2014 10:20 AM
Last Updated : 23 Jun 2014 10:20 AM

இலங்கை இயக்குநரின் படம் வெளியிடுவது நிறுத்தம்: பாதுகாப்பு கோரி முதல்வருக்கு கடிதம்

இலங்கையைச் சேர்ந்தவர் தயாரித்துள்ள திரைப்படம், சென்னையில் திரையிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கேட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன வித்தனகே என்ற இயக்குநர் தயாரித்துள்ள ‘வித் யூ.. வித் அவுட் யூ’ என்ற படம், சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது. சிங்கள ராணுவத்தில் இருந்து வெளியேறிய பணக்கார அடகுக்கடை முதலாளி, இலங்கைத் தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

தனது கணவர் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதும் இலங்கைப் போரின்போது, தமிழ்ப் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு உதவியதும் தெரிய வந்ததும் அந்தப் பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

தமிழ் மொழி பெயர்ப்புடன் இந்தப் படத்தை சென்னை ராயப்பேட்டை மற்றும் அமைந்த கரையில் உள்ள 2 வணிக வளாக தியேட்டர்களில் கடந்த சனிக்கிழமை திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், படத்தை திரையிடக் கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து படம் திரையிடப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

படத்தை திரையிட ஏற்பாடு செய்திருந்த பிவிஆர் சினிமா நிறுவன நிர்வாகி ஷீலாதித்யா போரா, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சில உள்ளூர் தமிழ் அமைப்புகளின் போராட்டம் மற்றும் மிரட்டல்களால் இந்தப் படத்தை சென்னையில் திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், மதிமுக, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட தமிழ் ஆதரவு இயக்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, இந்தப் படம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.

இதற்கிடையே, படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த இணைத் தயாரிப்பாளர் ராகுல் ராய், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘வித் யூ, வித் அவுட் யூ’ திரைப்படத்தை சென்னை யில் 20-ம் தேதி திரையிட திட்டமிட்டிருந்தோம். தியேட்டர் நிர்வாகங்களுக்கு மிரட்டல் போன்கள் வந்ததால் படத்தை நிறுத்தியுள்ளோம்.

இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், அநீதி குறித்தும் விளக்கக் கூடிய வாக்குமூலமாகவே இந்தப் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளன. எனவே தாங்கள் இதில் தலையிட்டு, படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x