இந்தியாவை இலங்கை அவமதிக்கும் விதத்தை உணரலாம்: மீனவர் பிரச்சினையில் அன்புமணி கருத்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர், சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேர் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவர்களின் காவல் 21ம் தேதி வரை நேற்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்புகளை மீறி தமிழக மீனவர்களின் 135 படகுகள் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக இன்றும் படகுகள் ஏலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் ஆகும்.

இந்திய-இலங்கை மீனவர் சிக்கலுக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இலங்கை அமைச்சர் உறுதியளித்த ஒரு சில மணி நேரங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதிலிருந்தே இந்தியாவை இலங்கை எவ்வாறு அவமதிக்கிறது என்பதை உணரலாம்.

இப்போது கைது செய்யப்பட்ட 16 பேர், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 21 பேர் என 37 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் ஏலத்தை தடுத்து நிறுத்தி அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in