

சென்னை: "தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீட்டால்தான் கிராமப்புற மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறதே தவிர, நீட் ஆதரவாளர்கள் கூறுவது போல் நீட் தேர்வு முறையால் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை" என்று சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியது. அதில், முதலில் சட்டப்பேரவை சபாநாயகர், ஆளுநரின் கடிதத்தை விளக்கி உரையாற்றினார். பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், ஆளுநரின் செயல் தமிழக அரசு அமைத்த ஏ.கே.ராஜன் குழுவை அவமதிக்கும் செயல் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி மசோதாவை நிராகரித்திருப்பது அடிப்படை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் கூறினார்.
இந்த சிறப்பு விவாதத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியது: "சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில், தமிழக சட்டப்பேரவையால் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையது அல்ல. 8 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட மசோதாவை ஆளுநர் சட்டப்பிரிவு 224-ன் படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும். அதுவே அவருடைய கடமை.
மத்திய அரசுப் பட்டியலிலோ, பொதுப்பட்டியலிலோ இருக்கும் விவகாரம் தொடர்பான மசோதாவை மீண்டும் மாநில அரசுக்கே அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சாசன சட்டத்தை மீறும் செயலாகும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு என்ற நடவடிக்கையால்தான் இன்று தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதே தவிர, நீட் தேர்வால் அல்ல. நீட் தேர்வு என்றால் அச்சம் ஏற்படும் அளவிற்கு மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ஆண்டுதோறும் பதிவு செய்துவிட்டு சுமார் 2 லட்சம் மாணவர்கள் வரை தேர்வைப் புறக்கணிக்கின்றனர்.
நீட் தேர்வு மாணவர்களுக்கு மனச்சுமை ஏற்படுத்தும் தேர்வு. மாணவர்களின் உயிரைப் பறிக்கும் தேர்வு. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை மருத்துவக் கல்வியைப் படிக்க விடாமல் தடுக்கும் இந்த நீட் தேர்வை எதிர்க்கும் மசோதாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் வேல்முருகன்.
முன்னதாக பேசிய புரட்சி பாரதம் கட்சியின் உறுப்பினர் ஜெகன்மூர்த்தி, "நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தும் எங்களின் புரட்சி பாரதம் கட்சியின் கோரிக்கையும் ஆகும். 15% ஆக உயர்த்தப்பட வேண்டும். கடந்த அதிமுக அரசு நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய 7.5% இட ஒதுக்கீட்டை 15% ஆக அதிகரிக்க வேண்டும். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 7%, தமிழ் வழி பயின்றவர்களுக்கு 5%, மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 2%, ஓய்வு பெற்று ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் மற்றும் விளையாட்டில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கும் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.