Published : 08 Feb 2022 05:39 AM
Last Updated : 08 Feb 2022 05:39 AM
சென்னை: நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்.13-ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட முன்வடிவு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், 142 நாட்களுக்குப்பின் கடந்த 1-ம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியதுடன், சட்டமுன்வடிவை மறு பரிசீலனை செய்யும்படியும் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்ட சட்ட முன் வடிவு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க, சட்டப்பேரவை கட்சித் தலைவர்களின் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தை அதிமுக, பாஜக ஆகியவை புறக்கணித்தன. இருப்பினும், அடுத்த கட்டமாக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை கூட்டி, மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என்று கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. கரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே சட்டப் பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த சிறப்புக் கூட்டம் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டம் தொடர்பாக அனைத்து பேரவை உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள் ளது.
இக்கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்படும் தீர்மானம் தொடர்பாக, கடந்த சில தினங்களாகவே சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு ‘டேப்’ வழங்கப்பட்டு, அவர்களின் இருக்கையில் கணினியும் பொருத்தப்பட்டிருந்தது. இதேபோன்று, ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவை கூட்ட அரங்கிலும், இருக்கையில் கணினி பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இ்ன்று நடைபெறும் கூட்ட நிகழ்வுகளும் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முந்தைய சிறப்பு கூட்டங்கள்
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்களை பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் 4 முறை கூட்டப்பட்டுள்ளது. கடந்த 2011 டிச.15-ல் முல்லை பெரியாறு விவகாரத்துக்கும், 2013-ம் ஆண்டு இலங்கை காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதற்காகவும், 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தெடார்பாகவும்- 2018-ம் ஆண்டு மேகேதாட்டு விவகாரம் தொடர்பாகவும் சிறப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் அவைக்குவந்து ஆய்வு செய்தார். அப்போது பேரவை செயலாளர், உயர் அதிகாரி கள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT