Published : 08 Feb 2022 07:50 AM
Last Updated : 08 Feb 2022 07:50 AM

மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு: சமூகநீதி கூட்டமைப்பின் காங்கிரஸ் பிரதிநிதி வீரப்ப மொய்லி

சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையுமாறு அழைப்பு விடுத்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைத்தார் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு.

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கடிதத்தை ஏற்று அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பின் காங்கிரஸ் கட்சி பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை அக்கட்சியின் தலைவரான சோனியா காந்தி நியமித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஸ்டாலினின் முயற்சியை வரவேற்றுள்ளன.

நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்து பணியாற்ற வருமாறும், கூட்டமைப்பில் தங்கள் கட்சியின் பிரதிநிதி ஒருவரை அறிவிக்கும்படியும் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்சோனியா காந்தியை திமுக பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று சந்தித்து, முதல்வரின் கடிதத்தை வழங்கினார். இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார்.

இதையடுத்து, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக, வீரப்ப மொய்லியை சோனியாகாந்தி உடனடியாக நியமித்துள்ளார். இதுபற்றி மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, சமூகநீதி கூட்டமைப்பு தொடர்பாக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காக்க தானும், தான்சார்ந்த இயக்கமும் ஜனநாயக, மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுடன் இணைவதாகவும், இதுகுறித்து நேரில் கலந்தாலோசிப்ப தாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘சமூகநீதி கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற்காக வாழ்த்து தெரிவித்து, இந்த அமைப்பை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்’ என முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்புக்கான முன்னெடுப்பை பாராட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி கடிதம் எழுதியுள்ளார். இந்த முயற்சிக்கு மக்கள் ஜனநாயக கட்சி முழு ஒத்துழைப்பை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x