

தூத்துக்குடி: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்குவிஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்குஉதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் 9 சந்நிதிகளிலும் வலம்வந்து கோயிலைச் சேர்ந்தது. இதையடுத்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5.20 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கொடிமர பீடம்தர்ப்பை புல்லாலும், பட்டு ஆடைகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டது. ‘அரோகரா' கோஷத்துடன் சோடச தீபாராதனை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதினம் அருணாச்சல தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் வட்டாட்சியர் சுவாமிநாதன், கோயில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மாலை 4 மணிக்கு மேல் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி உழவாரப்பணி செய்து கோயிலை சேர்ந்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீபெலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்தப் பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு, 9 சந்நிதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.