பொங்கல் பரிசு திட்டத்தில் ரூ.500 கோடி ஊழல்: திமுக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார். படங்கள்:  மு.லெட்சுமி அருண்
கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார். படங்கள்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தில் திமுக அரசு ரூ.500 கோடிஊழல் செய்துள்ளதாக, எதிர்க்கட்சிதலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் அவர் பேசியதாவது: பொய்யான, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது..

சட்டப்பேரவைத் தேர்தலின்போது 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது. ஆனால், அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள் என்பது தெரியவில்லை.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாகவும், அனைத்து நகைக் கடன்களும் தள்ளுபடி என்றும் அறிவித்தனர். ஆனால், அவற்றை நிறைவேற்றவில்லை. 200-க்கும் மேற்பட்டவாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். இதுகுறித்து கேட்டால் நிதியில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு என்று ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க ஸ்டாலினை தேர்வு செய்யலாம்.

திருநெல்வேலியில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள்.
திருநெல்வேலியில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள்.

நகைக் கடன் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தனர். இப்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி என்றும், 13 லட்சம் பேர் மட்டுமே பயன்பெறுவர் என்றும் திமுக அறிவித்துள்ளது. இதனால் மீதம் உள்ள 35 லட்சம் பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு ரொக்கத் தொகையை வழங்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமாக இருக்கவில்லை. கண்ணுக்கு தெரியாத காற்றிலேயே ஊழல் செய்த திமுக, இப்போது பொங்கல்பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தில் ரூ.500 கோடி ஊழல் செய்துள்ளது. மக்கள் வயிற்றில் அடித்துள்ளனர்.

நீட் தேர்வு வருவதற்கு காங்கிரஸும், திமுகவுமே முழு காரணம். 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளித்து ஏழை, கிராமப்புற மாணவர்கள் மருத்துவராக அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in