Published : 08 Feb 2022 07:15 AM
Last Updated : 08 Feb 2022 07:15 AM

சிம்ஸ் பூங்காவில் காய்த்து குலுங்கும் ருத்ராட்சை: ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச்செல்லும் சுற்றுலா பயணிகள்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா இயற்கையாகவே உருவானது. இங்கு பழமை வாய்ந்த அரிய வகை மூலிகைகள், மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, தாவரவியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், நேபாளத்தை தாயகமாக கொண்ட ருத்ராட்சை மரங்கள், 1948-ம் ஆண்டு இப்பூங்காவில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இம்மரத்தை பக்தியுடன் பார்த்து செல்கின்றனர். இந்து சமயத்தில் ருத்ராட்சை முக்கிய அங்கம் வகிப்பதுடன், புனிதமாக கருதி அவற்றை பிரார்த்தனை செய்ய பயன்படுத்துகின்றனர்.

‘எலியோகார்பஸ் கனிட்ரஸ்’ என்ற தாவரவியல் பெயரை கொண்ட இந்த மரத்தின் விதைதான் ருத்ராட்சை. இமயமலை அடிவாரத்திலுள்ள கங்கை சமவெளிப் பகுதிகளிலிருந்து தென் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஹவாய் தீவுகள் வரை வளர்கின்றன. இம்மரத்தின் பழம் பச்சை நிறமாக இருந்து, கனியும்போது நீல நிறமாக மாறும். நான்கு ஆண்டுகளில் காய்க்க தொடங்கும். இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் நோய் நிவாரணியாகவும் ருத்ராட்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ருத்ராட்சையில் ஒன்று முதல் 21 முகங்கள் வரை உள்ளன. இதில் 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சை கொட்டைகளை, இந்துக்கள் தங்கள் கழுத்தில் அணிகின்றனர். தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், சிம்ஸ் பூங்காவில் உள்ள 3 மரங்களில் ருத்ராட்சை காய்கள் கொத்து, கொத்தாக காய்த்து குலுங்குகின்றன. இதனை, சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.

மரத்திலிருந்து விழும் காய்களை உள்ளூர்வாசிகள் சேகரித்து, மாலையாக கோர்த்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஒரு காய் ரூ.10 முதல் ரூ.30 வரையும், அரிய காய்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரையும் விற்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x