

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரச்சினைக்குரிய இடங்களுக்கு போலீஸார் நேரடியாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு அளவில் செய்துள்ளது. அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் பணம் கொடுத்து வாக்காளர்களை கவர்வதை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து கண்காணித்து வருகிறது. அவர்களுடன் இணைந்து போலீஸாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவது, வாக்கு மையங்கள், வாக்கு சாவடிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது, வாகன தணிக்கை செய்வது உள்ளிட்டவைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார். இதில் காவல் கூடுதல், இணை, துணை, உதவி ஆணையர்கள் கலந்து கொண் டனர்.
அப்போது, ‘போலீஸார் குழுவாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், வாகன தணிக்கை செய்யும் பிரச்சினைக்குரிய இடங்களில் நேரடியாகச் சென்று கண்காணிக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள், வழிகாட்டுதல்களை கண்டிப்புடன் பின்பற்றுவது மட்டும் அல்லாமல் அதை அமல்படுத்தவும் செய்ய வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும், வாக்கு சேகரிப்பு, வாக்குப்பதிவு உள்ளிட்டவைகளின்போது தேவைக்கு தகுந்தாற்போல் காவலர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.