Published : 08 Feb 2022 07:21 AM
Last Updated : 08 Feb 2022 07:21 AM
ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பூஜை செய்யும் பூசாரிகளின் விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், அனைத்து உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 12,959 கோயில்களில் ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் பூஜை நடந்து வருகிறது.
இக்கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகள் ஆகியோர் விவரங்கள் உதவி ஆணையர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இக்கோயில்களில் தற்போது பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகள் ஆகியோர், அந்தந்தக் கோயில்களின் ஆகம விதிகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி பூஜை செய்வதை உறுதி செய்து, ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒரு நபர் மட்டுமே பதிவு செய்து உதவி ஆணையர் நிலையில் அனுமதி வழங்க வேண்டும்.
எனவே, அவர்களின் விவரங்கள் மற்றும் உரிய ஆவணங்களை உதவி ஆணையர்கள் பெற்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வது, அனுமதி வழங்கும் பணியை வரும் 28-ம் தேதிக்குள் முடித்து, அனுமதி நகல்களை இவ்வலுவலகத்துக்கு மார்ச் 7-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் ஒரு நபர், ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களில் பூஜை செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது. உதவி ஆணையர் பெறும் பதிவில், பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண், புகைப்படம், தொலைபேசி எண், குற்றவியல் நடவடிக்கைகள் ஏதுமில்லை என்பதற்கான சான்று உள்ளிட்ட விவரங்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT