Published : 01 Apr 2016 05:41 PM
Last Updated : 01 Apr 2016 05:41 PM

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் மாணவர்களை களம் இறக்க அரசியல் கட்சிகள் திட்டம்

சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரத்துக்கும், இளைய தலைமுறையினரின் வாக்குகளை கவர்ந்திழுக்கவும், கல்லூரி மாணவர்களை பயன்படுத்த அரசியல் கட்சியினர் வியூகம் அமைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் மே 16-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்து கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்துக்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக பொருளாளர் ஸ்டாலின், ‘நமக்கு நாமே’ என்ற தலைப்பில் இளைஞர்களையும், தொழில் அதிபர்கள், வழக்கறிஞர்கள் என தனிதனியாக சந்தித்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார்.

காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் இளங்கோவன், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் என அனைவரும் மாவட்டம் மாவட்டமாக சென்று தங்களது கட்சியை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சி செயலாளர்கள் மூலமாக இளைய தலைமுறை வாக்குகளை கவர்ந்திழுக்க அரசியல் கட்சியினர் மும்மரம் காட்டி வருகின்றனர். இத்தேர்தலில் புதியதாக வாக் காளிப்பவர்கள் எண்ணிக்கை கணிச மாக உயர்ந்துள்ளதால், அவர்கள் வாக்கை பெற்றிட, கட்சி சார்ந்த பிரச்சாரத்துக்கு கல்லூரி மாணவர்களை பயன்படுத்த கட்சியினர் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 14,06,392 பேரும், பெண் வாக்காளர்கள் 13,90,321 வாக்காளர்களும் பிறர் (திருநங்கை) 271 வாக்காளர்கள் என மொத்தம் 27,96,984 வாக்காளர்கள் உள்ளனர். இதில் இளைய தலைமுறை வாக்காளர்கள் மட்டும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கைள கவர அரசியல் கட்சியினர் ஒவ்வொரு வார்டு, பகுதி,வட்டம் வாரியாக இளைஞரணி, மாணவரணி அமைப்பாளர்கள் மூலம் கல்லூரி மாணவர்கள் பிரச்சாரத்துக்கு அழைத்து வரவும், தேர்தல் முடியும் வரை வேட்பாளருடன் அணிவகுத்து ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் நிலையில், அரசியல் பிரமுகர்களின் தேர்தல் பிரச்சார பயன்பாட்டுக்கு அவர்களை ஈர்க்கும் நடவடிக்கையால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

கல்லூரி மாணவர்கள் தேர்வு முடித்தவுடன், கட்சி சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதை பெற்றோர் அறிவுருத்தினாலும், அவர்கள் செவி கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை. அரசியல் கட்சி சார்ந்த நண்பர்களின் பழக்க வழக்கத்தால், தேர்வுக்கு தயாராவதை காட்டிலும் தேர்தலுக்கு தயாராகி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x