

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (வி.ஏ.ஓ.) தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் 243 தேர்வு மையங்களில் 3,628 தேர்வுக் கூடங்களில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 662 பேர் தேர்வெழுத உள்ளனர். அனைத்துத் தேர்வுக் கூடங்களும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். காலை 10.30 மணி வரை மட்டுமே தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு தேர்வுக் கூடத்திலும் ஒரு ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அனைத்து தேர்வு நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்வுக் கட்டுப்பாடு அலுவலருக்கு அறிக்கை அனுப்புவார். இதுதவிர அனைத்து தேர்வு மையங்களையும் ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவருக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
கூர்வுணர் தேர்வுக் கூடங்கள் (Sensitive Centres) அனைத்தும் இணையவழி நேரலை மூலமாக தேர்வாணைய அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்படும். தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடம் குறித்த சந்தேகம் ஏதும் இருப்பின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு மைய / தேர்வுக்கூட மாற்றங்கள் மற்றும் தேர்வு பாட மாற்றங்கள் கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தேர் வெழுதச் செல்வோர் செல்போன், கால்குலேட்டர், நினைவகக் குறிப்பு, புத்தகம், மின்னணு சாதனங்கள், பதிவு செய்யும் உபகரணங்கள் உள்ளிட்டவை எடுத்துச் செல்லக் கூடாது. இவற்றுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா தெரிவித்துள்ளார்.