

தூத்துக்குடி/ கோவில்பட்டி: தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் அவர் பேசியதாவது: அரசோடு இணைந்து செயல்படக்கூடிய உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால் தான், அரசின் திட்டங்களை மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்க முடியும்.
தூத்துக்குடியில் அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் கட்டியுள்ளனர். ஆனால், மழைநீர் அந்த வடிகால் வழியாக வடியவில்லை. மோட்டார் வைத்தும், சாலைகளை வெட்டியும் தான் மழைநீரை வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது. தூத்துக்குடியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தூத்துக்குடியில் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பர்னிச்சர் பார்க் வரவுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தகவல் தொழில்நுட்ப பூங்காவும் தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ளது என்றார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் உடனிருந்தனர்.
கோவில்பட்டி
விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் பேரூராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. அமைச்சர்பெ.கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தனர். வேட்பாளர்களை அறிமுகம் செய்து கனிமொழி எம்.பி. பேசினார்.