Published : 08 Feb 2022 11:41 AM
Last Updated : 08 Feb 2022 11:41 AM
வேலூர்: வேலூர் மாநகராட்சி பாமக வேட்பாளரை, திமுக எம்எல்ஏக்கள் கடத்திச் சென்று மிரட்டியதாக பாமகவினர் புகார் அளித்துள்ள நிலையில், பாமக வேட்பாளர் தங்களுக்கு சால்வை அணிவித்த வீடியோ காட்சிகளை திமுக மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்த குமார் வெளியிட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சி தேர் தலுக்கான மனுத்தாக்கல் முடிந்த நிலையில், மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட 24-வது வார்டில் அதிமுக வேட்பாளரின் மனு நிராகரிக் கப்பட்டது. இந்த பிரச்சினை முடிவதற்குள் 24-வது வார்டில் பாமக வேட்பாளராக போட்டியிடும் பரசுராமன் என்பவரை திமுகவினர் கடத்திச் சென்று மிரட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் நேற்று முன்தினம் குற்றச்சாட்டை எழுப்பினார்.
அதில், ‘‘மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் வெற்றி பெறு வதுதான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக்கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல் துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப்பதிவால் வேலூர் மாநகராட்சி தேர்தல் களம் சலசலப்பை கூட்டியுள்ளது.
இந்நிலையில், பாமக வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம், மாவட்டத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்த பிரச்சினை தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் புகார் மனுவை நேற்று அளித்தனர். அதில், ‘‘வேலூர் மாநகராட்சி தேர்தலில் பாமக சார்பில் 25 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அணைக் கட்டு எம்எல்ஏ நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் ஆகியோர் எங்கள் வேட்பாளர்களை நேரிலும், செல்போன் மூலமாகவும் அழைத்து வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டுகின்றனர்.
குறிப்பாக, 24-வது வார்டு பாமக வேட்பாளர் ஆர்.டி.பரசு ராமன் என்பவரை கடந்த 5-ம் தேதி இரவு நந்தகுமாருக்கு சொந்தமான ஹோட்டலில் நேரில் அழைத்து வேட்புமனுவை வாபஸ் பெறுமாறும், இல்லாவிட்டால் ஆம்புலன்ஸ் தொழிலை செய்ய விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர். மிரட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் தனது முகநூல் பக்கத்தில் ‘‘பாமக நிறுவனர் உண்மையை விசாரிக்காமல் எங்கள் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடடையது இல்லை. பாமக வேட்பாளர் பரசுராமனை மிரட்டி வெற்றிபெற வேண்டிய நிலையில் திமுக எப்போதும் இருந்ததில்லை’’ என்று குறிப்பிட்டதுடன் தனது ஹோட்டலுக்கு பரசுராமன் தனியாக வருவதும் அங்குள்ள அறையில் வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறிது நேரம் உரையாடும் கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சியை வெளியிட்டு சலசலப்பை கூட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT