

சென்னை: ஹிஜாப் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்ட அறிக்கையில், “கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது நாடுமுழுவதும் வழக்கமான ஒன்று. இதுவரையில்,எந்த ஓர் அரசும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதில் தலையிடவில்லை. கர்நாடகா மாநிலத்தில் தற்போதுள்ள பாஜக ஆட்சியில்,மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதிக்கப்படுகிறது. கர்நாடகா மாநிலம் முழுவதும் முஸ்லிம் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் உயர் நீதிமன்றம் வரை போயுள்ளது.
கர்நாடக அரசு, உயர்நீதிமன்ற முடிவு வரும்வரைக்கும் நடப்பில் உள்ள சீருடை விதிமுறைகள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தொடரும் என்றொரு உத்தரவை பிப்ரவரி 4-ஆம் நாள், போட்டிருக்கிறது. பிந்தூரில் அரசு பி.யூ (Govt PU College) கல்லூரியில் ஹிஜாப்புக்கு போட்டியாக இந்துத்துவ மாணவர்கள் காவித் துண்டை அணிந்துகொண்டு வர, கல்லூரி வளாகத்தில் ஹிஜாப்புக்கும், காவித் துண்டுக்கும் சேர்த்து தடை விதித்துள்ளது பியூ கல்லூரி. குண்டப்பூர் ஜூனியர் கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் மற்றும் காவி உடை அணிந்து கொண்டு வந்தவர்களை வெளியில் தள்ளி கதவைப் பூட்டியுள்ளது.குண்டப்பூரில் உள்ள பந்தர்கர் கல்லூரி மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் அரசியலுக்காக பாஜக இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. மக்கள் எந்தவொரு மதநம்பிக்கையை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் அரசியல் சட்டப்பிரிவு 25 உத்தரவாதம் அளிக்கிறது. சட்டம் வழங்கியுள்ள உரிமைப்படியே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இதில்,தண்டனைக்குரிய குற்றம் எதுவும் இல்லை. பாஜக ஏற்கெனவே கர்நாடகத்தை ஆண்டுள்ளது. அப்போதும் இந்தப் பிரச்சினை எழவில்லை. இம்முறை காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி ஏற்பட்ட உடனேயும் ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்படவில்லை. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு தோல்வி முகத்தில் இருக்கிறது. இப்போது தேர்தல் ஜுரத்தில் இருந்து தப்பிக்கவே கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனையை கையில் எடுத்து தேசியப் பிரச்சினையாக்கி வருகிறது பாஜக. முஸ்லிம் பெண்களின் காவலன் என்று மார்தட்டும் பிரதமர் மோடி, இந்தப் பிரச்சனையில் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.
இந்தியாவில் ஒரு மாநில முதல்வர் சட்டமன்றத்துக்கு காவி உடை அணிந்து கொண்டு வருகிறார். உத்தராகண்ட் சட்டமன்றத்தில் சாது ஒருவர் கோவணம் மட்டும் கட்டி வந்து உரையாற்றினார். அதை எல்லாம் மதத்தோடு தொடர்புப்படுத்தாதபோது, கல்லூரிக்கு வரும் மாணவிகள் ஹிஜாப் அணிவது மட்டும் எப்படி மதமாகிறது. சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிந்துதான் கல்லூரிக்கு வருகின்றனர். இடுப்பில் தல்வார் வைத்திருப்பார்கள். சீக்கிய மாணவர்களுக்கு சீருடை சட்டம் போடுமா பாஜக அரசு? ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நீட் தேர்வுக்கு வந்த கிறித்தவ கன்னிமார்களை தேர்வெழுத அனுமதிக்க மறுத்தனர். கிறித்தவ கன்னியர்களும் முஸ்லிம் மாணவிகளும் அவர்கள் நம்பிக்கை சார்ந்த உடைகளை உதறிவிட முடியாது. பதிலுக்கு இந்து மாணவிகள் காவியில் உடை அணிந்து வந்தால் அனுமதிக்கலாம். ஹிஜாப் பிரச்சினை மற்றுமொரு ஷாஹின்பாக்கை உருவாக்கும் என்கிறார்கள்.
சபரிமலைக்கு நேர்ந்து கருப்பு ஆடையும் மாலையும் அணிந்து கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவர்களை, அலுவலகங்களுக்கு பணிக்கு வரக்கூடியவர்களை மற்றவர்கள் பயபக்தியோடு நடத்துவதை காண்கிறோம். காவல்துறை முதல் வங்கி அலுவல்கள் வரையிலும் இதை பார்க்கிறோம். அவர்களுக்காக தண்ணீர் குடிக்க பிரத்யேக குவளை வைத்திருப்பதைப் பார்க்கிறோம். எனவே, இங்கே முழு மதச்சார்பின்மை என்பது எங்கேயுமே இல்லை. ஆனால், மதச்சார்பற்ற உடை என்று முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாபைக் கழற்ற முயற்சிப்பது அப்பட்டமான பாரபட்சம் என்பது மட்டும் அல்ல, அரசமைப்புச்சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கையுமாகும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.