ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாவை முழுமையாகப் பயன்படுத்துங்கள்: பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுரை

கோவை வடவள்ளியில் நடைபெற்ற பாஜக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
கோவை வடவள்ளியில் நடைபெற்ற பாஜக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
Updated on
1 min read

கோவை: "மக்களைச் சென்றடைய சமூக வலைதளங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்” என உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தினார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை பாஜக மாநகர், மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வடவள்ளியில் இன்று நடைபெற்றது. அப்போது வேட்பாளர்களிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது: ”தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நமக்கு 11 நாட்கள் மட்டுமே கிடைத்துள்ளன. எனவே, வெற்றிபெற கடின உழைப்பு அவசியம். நகர்புறங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். அவர்கள் சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளை பார்க்கின்றனர். கவனிக்கின்றனர்.

எனவே, உங்களது புத்திகூர்மை மூலம் அனைத்து மக்களையும் நீங்கள் சென்றடைய வேண்டும். அதற்கு உங்கள் கையில் இருக்கும் செல்போன் மிக முக்கியமான ஆயுதமாக இருக்கப்போகிறது. காரில் செல்லும்போது கூட செல்போனில் மக்களிடம் பேசுங்கள். ஒருநாளும் மக்களோடு பேசாமல் இருக்க வேண்டாம். ஊரின் முக்கிய தலைவர்கள், சமூகத்தில் முக்கிய தொண்டாற்றியவர்கள், முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் என தினமும் 50 முதல் 100 பேரிடம் பேசுங்கள். அதைத்தாண்டி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்-ஐ முழுமையாக பயன்படுத்துங்கள். கட்சி தலைமையகத்தில் இருந்து வரும் வீடியோக்கள், உங்களின் பிரச்சாரங்களை மக்களுக்கு அனுப்பிவையுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில், பாஜக தேசிய மகளிரணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், துணை தலைவர் கனகசபாபதி, சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநகர், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in