நடிகர் விஜய் சந்திப்பு பற்றி பதிலளிப்பதைத் தவிர்த்து புறப்பட்ட முதல்வர் ரங்கசாமி

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 12-ம் ஆண்டு விழாவில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்று பூஜை செய்து துவக்கி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 12-ம் ஆண்டு விழாவில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்று பூஜை செய்து துவக்கி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுவையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜய் சந்திப்பு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்தார்.

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 12-ம் ஆண்டு விழா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி கட்சியின் ஆண்டு விழாவை கட்சி கொடியேற்று பூஜை செய்து தொடங்கி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது: ''எங்களது ஆட்சியில் புதுச்சேரி வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் உதவியோடு என்.ஆர்.காங்கிரஸ் அரசானது தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக கவனம் செலுத்துகிறோம். அனைத்து சமூக மக்களும் முன்னேற அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிச்சயமாக செயல்படுத்துவோம்.

வேலைவாய்ப்பினை உருவாக்கி காலிப் பணியிடங்களை நிரப்புவோம். தற்போது அப்பணி தொடங்கப்பட்டுள்ளது. காவல்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, வருவாய்துறை உள்பட அனைத்து துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அறிவித்ததுபோல் காலிப் பணியிடங்கள் அனைத்தும் எங்கள் அரசு நிரப்பும். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் உதவியோடு புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி நிச்சயமாக சிறப்பாக இருக்கும். மக்கள் பணியில் எங்கள் அரசு சிறப்பாக செயல்படும்.

மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம். பட்ஜெட்டில் கூடுதலாக ரூ. 2 ஆயிரம் கோடி தர கேட்டுள்ளோம். மத்திய அரசு கொடுப்பார்கள் என்று நம்பிக்கையுள்ளது'' என்று தெரிவித்தார்.

நடிகர் விஜய் சந்திப்பு பற்றி கேள்விகளைக் கேட்டவுடன் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து ரங்கசாமி புறப்பட்டார். தொடர்ந்து பல கேள்விகளுக்கும் பதில் தரவில்லை. குறிப்பாக வாரியத்தலைவர் பதவி விவகாரத்தினால் பாஜக-சுயேட்சை எம்எல்ஏக்கள் அதிருப்தி தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் கட்சி அலுவலகத்திலிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.

நிறைய நிகழ்வுகள் இருப்பதால் அவசரமாக புறப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in