

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் 45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று (ஏப். 15) முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட, கிழக்கு கடல் பகுதி யில், ஏப்ரல், மே மாதங்கள் மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இனப் பெருக்க காலமாக, மத்திய வேளாண் அமைச்சகம் கண்டறிந் துள்ளது. இக்காலத்தில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து இனவிருத்தி செய்யும். கடலில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில், இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழு வைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கான 45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வரும் மே 29-ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த நாட்களில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கும் விசைப் படகுகள், இழுவைப் படகுகளுக்கு அனுமதி கிடையாது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு கள் உள்ளன மீன்பிடித் தடைக் காலம் இன்று முதல் அமலுக்கு வந்தபோதிலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரும் பாலான விசைப் படகுகள் நேற்று முதலே கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி தளத்தில் இருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன் பிடித்து வருகின்றன. அவை இன்று முதல் படகு தளத்தில் நிறுத்தப் படும். அதேநேரம் குமரி மாவட்டத் தின் மேற்கு கடற்கரை பகுதிகளான குளச்சல், தேங்காப்பட்டணம், நீரோடி போன்ற பகுதிகளில் வழக்கம்போல் ஆழ்கடல் மீன்பிடித்தல் நடைபெறும்.