

சென்னை: கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளை இணையவழியில் நடத்த உள்ளது. இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்றுதொடங்குகின்றன.
இந்நிலையில், இணையவழி தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு)எம்.மணிவண்ணன் வெளியிட்டுள்ளார். அதன்படி, கரோனா பரவல் சூழலை கருத்தில்கொண்டு மாணவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே தேர்வைஎழுதலாம். தேர்வு நுழைவுச்சீட்டுக்குப் பதில் இணையவழியில் அவர்களின் சேர்க்கை எண்ணைபயன்படுத்தி தேர்வில் கலந்துகொள்ளலாம்.
தேர்வுக்கான வினாத்தாளை தேர்வு நாள் அன்று காலை 9 மணி அளவிலும் பிற்பகல் 1 மணி அளவில் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். காலை தேர்வை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் தேர்வை 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் எழுதலாம்.
விடைத்தாள் முகப்பு பக்கம்இணையதளத்தில் உள்ளது. மாணவர்கள் அதை பதிவிறக்கம் செய்துஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக நிரப்பி அதை விடைத்தாளுடன் இணைக்க வேண்டும். தேர்வு எழுதிய அன்றேய தினமே விடைத்தாளை பல்கலைக்கழக தேர்வு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விடைத்தாள்களை அனைத்து தேர்வுகளும் முடிந்த கடைசி நாளன்று பல்கலைக்கழகத்துக்கு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும். இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட விடைத்தாள் மற்றும் தபால் மூலம் பெறப்பட்ட விடைத்தாள் இரண்டும் ஒப்பிடப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். விடைத்தாள்களில் மாற்றம் இருந்தால் அவை மதிப்பீடு செய்யப்படாது.
பார்வைக்குறைபாடு உள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்அனுமதி பெற்று தேர்வு எழுத உதவியாளர்களை ஏற்பாடுசெய்துகொள்ளலாம். விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வெழுத தடை செய்யப்படுவர். மாணவர்கள் தேர்வுகள் தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அவ்வப்போது பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.