Published : 07 Feb 2022 08:04 AM
Last Updated : 07 Feb 2022 08:04 AM

சென்னையில் கமல்ஹாசன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குபதிவு வரும் 19-ம்தேதி நடைபெற உள்ளது. இதில், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாலாவை ஆதரித்து, மந்தைவெளியில் உள்ள விசாலாட்சித் தோட்டத்தில் நேற்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து கமல்ஹாசனை வரவேற்றனர். அங்கு வீடு வீடாகச் சென்று, துண்டுப் பிரசுரங்களை வழங்கி கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்கள் நலனில் ஆர்வம் கொண்ட, நேர்மையானவர்களான மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.

பின்னர், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமைஅலுவலகத்தில், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், 182 வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்துவைத்தார்.

உறுதிமொழி ஏற்பு

தொடர்ந்து, `நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மை யாக எதிர்கொள்வேன், மருத்துவ மனை தரத்தை உயர்த்துவேன்' உள்ளிட்ட உறுதி மொழிகள் அடங்கிய சத்தியப் பிரமாணத்தை வேட்பாளர்கள் எடுத்துக் கொண்டனர்.

அப்போது, கட்சி நிர்வாகி ஒருவர் ரூ.1 லட்சமும், கொளத்தூரைச் சேர்ந்த எட்வின் என்ற 6 வயது சிறுவன், உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயையும் கமல்ஹாசனிடம் நன்கொடையாக அளித்தனர்.

பின்னர், கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எங்களது பிரச்சாரம், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்புடையதாக இருக்கும். செய்யக் கூடிய விஷயங்கள் அனைத்தையும் செய்து காட்டும் வாய்ப்பாக இந்த தேர்தலைப் பார்க்கிறேன். நீட் விவகாரத்தில் மத்திய அரசு சொல்வதைத்தான் ஆளுநர் செய்கிறார்" என்றார்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது என்று ராகுல் காந்தியின் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு "தமிழகத்தை ஒருபோதும் பாசிசம் ஆளக்கூடாது என்பதுதான் எனது கருத்து" என்று கமல்ஹாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x