

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட74,000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று (பிப். 7) மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புறஉள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்உள்ள 12,838 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 26-ம் தேதி அறிவித்திருந்தது.
கடந்த ஜன. 28-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. பிப். 4-ம் தேதியுடன் மனு தாக்கல் நிறைவடைந்தது. இதில், மாநகராட்சிகளில் போட்டியிட 14,701 வேட்புமனுக்கள், நகராட்சிகளில் 23,354 வேட்புமனுக்கள், பேரூராட்சிகளில் போட்டியிட 36,361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 699 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் நேற்று முன்தினம் நடைபெற்றது.முறையாக பூர்த்தி செய்யாதவை, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காதவை, வைப்புத்தொகை செலுத்தாதவை போன்ற காரணங்களால் பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்றுமாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. இன்று மாலையே வேட்பாளர்இறுதிப் பட்டியல்கள் வெளியிடப்பட உள்ளன. தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
மாவட்ட அளவில் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 40 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டார அளவில் தேர்தல் பணிகளைக் கண்காணித்து, மாவட்டப்பார்வையாளர்களுக்கு தெரிவிக்கஏதுவாக 697 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களின் தொடர்பு எண்கள்மாநில தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளன.