Published : 07 Feb 2022 08:16 AM
Last Updated : 07 Feb 2022 08:16 AM
சென்னை: பாரம்பரிய அடையாளத்தை மக்களுக்கு நினைவூட்டவே 'மீண்டும்மஞ்சப்பை' திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக சாயம் தோய்க்காத பைகள் பயன்பாட்டை மட்டுமே ஊக்குவிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும், அதற்கு மாற்றுப் பொருட்களையும் அரசு வெளியிட்டது. எனினும், மாற்றுப் பொருட்களின் விலை கூடுதாக இருப்பதாலும், போதுமான மக்கள் ஒத்துழைப்பு இல்லாததாலும் பிளாஸ்டிக் தடை வெற்றி பெறவில்லை. இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மக்கள் இயக்கமாக கொண்டுசென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தமிழ அரசு அறிவித்தது.
மேலும், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக 'மீண்டும் மஞ்சப்பை' என்ற திட்டத்தை கடந்த டிச. 23-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். "மஞ்சப்பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டாம். சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளம்தான் மஞ்சள் பை என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இந்த திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், தொண்டு நிறுவனங்களும், பெருநிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்பு நிதியிலும் மஞ்சள் நிற துணிப் பைகளை வழங்கி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.
மாசடைந்த நீர்நிலைகள்
இதற்கிடையே, "சாயப்பட்டறை கழிவுகளால் திருப்பூர், கரூர் பகுதிகளில் நொய்யல் ஆறு கடுமையாக மாசடைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாயக் கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைந்துள்ளன.
பல நேரங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டு இருப்பதாலும், சில அதிகாரிகளின் பணத்தாசை காரணமாகவும், அரசியல் அழுத்தம் காரணமாகவும் சாயக்கழிவுகளால் நீர்நிலை மாசுபடுவதை தவிர்க்க முடியவில்லை.
மஞ்சள் கிழங்கு சாயம்
உண்மையிலேயே சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடாது என்றால் மஞ்சள் சாயம் தோய்த்த பைகளுக்கு பதிலாக, மஞ்சள் கிழங்கிலிருந்து கிடைக்கும் சாயத்தில் தோய்த்த பைகளை மட்டுமே பிரபலப்படுத்த வேண்டும் ரசாயன சாயம் தோய்த்த பைகளை அரசு பிரபலப்படுத்தினால், அதன் மூலமும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "பாரம்பரிய அடையாளத்தை மக்களுக்கு நினைவூட்டவே 'மீண்டும் மஞ்சப்பை' என்ற கருப்பொருள் கையாளப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சாயம் தோய்க்காத துணிப் பைகள் பயன்பாட்டை மட்டுமே ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT