

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி வீட்டுக்குள் புகுந்த நபர்கள், 7 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி நகைகளை நூதன முறையில் மோசடி செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவலூர்பேட்டையில் வசிப்பவர் சீனிவாசன்(40). நேற்று அதிகாலை வீட்டில் தன் குடும்பத்தினருடன் உறங்கிக்கொண்டிருந்தார். வீட்டின் முன் பக்க கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்தார்.
அப்போது தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்ட 7 பேர், உள்ளே புகுந்துள்ளனர். தாங்கள் தேர்தல் சிறப்பு பறக்கும்படையினர் என்று அறிமுகம் செய்துகொண்ட அவர்கள், ‘வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக உங்கள் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது’ என்று கூறியுள்ளனர்.
உடனே சீனிவாசன், ‘அப்படியெல்லாம் பணம் எதுவும் பதுக்கவில்லை’ என்று கூறியுள்ளார். அவர் சொன்னதை ஏற்காமல் அந்த நபர்கள், வீட்டில் இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்த 7 பவுன் மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்களை எடுத்துக்கொண்டு, ‘போலீஸ் ஸ்டேஷ னுக்கு வாங்க.. உங்களை விசாரிக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு சைரன் பொருத்திய வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
உடனடியாக சீனிவாசன் அவலூர்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விவரத்தை கூறியிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் அப்படி எந்த அதிகாரிகளும் வராமல் போகவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதுதொடர்பாக அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் பறக்கும்படையினர் என்ற பெயரில் அதிகாலையில் நடந்த இந்த நூதன மோசடி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.