

புதுச்சேரி: புதுச்சேரி பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்றது. என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் வென்றன. கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. இந்நிலையில் சுயேச்சை எம்எல்ஏக்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்.
மேலும் பாஜகவைச் சேர்ந்த வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனர். என்ஆர் காங்கிரஸூக்கு முதல்வர் உட்பட 4 அமைச்சர் பதவிகளும், பாஜகவுக்கு இரு அமைச்சர் பதவிகளும் தரப்பட்டன. பேரவைத் தலைவர் பதவி பாஜகவுக்கும், பேரவை துணைத்தலைவர் பதவி என்ஆர் காங்கிரஸூக்கும் தரப்பட்டன.
இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத என்ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேச்சைகளுக்கு வாரியத்தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர். உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு பிப்டிக் தலைவர் பதவி தரப்பட்டதால் அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். பாஜக எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தி அடைந்ததையடுத்து முதல்வர் ரங்கசாமியை கட்சித் தலைமையுடன் சென்று சந்தித்தனர். ஆனால் வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தற்போது பதவி தர முதல்வர் ரங்கசாமி மறுப்பு தெரிவித்தார். இதனால் பாஜக மற்றும் ஆதரவு சுயேச்சைகள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவு தரும் சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், அசோக் ஆகியோர் பாஜகவுக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெற முடிவு எடுத்துள்ளனர்.
இதுபற்றி சுயேச்சை எம்எல்ஏக்கள் தரப்பில் கூறுகையில், “ஆளுங்கட்சியான என்ஆர் காங்கிரஸ் எங்களை கண்டுகொள்ளவில்லை. அவர்களை எதிர்த்து வென்றவர்கள் நாங்கள். தொகுதி மக்களுக்கு ஏதும் செய்ய முடியவில்லை. இதனால் தொகுதி மக்கள் அதிருப்தி அடைகின்றனர். வாரியத்தலைவர் பதவி கிடைத்தாலாவது மக்களுக்கு நலத்திட்டம் செய்ய திட்டமிட்டோம். அதுவும் கிடைக்கவில்லை. அதனால் பாஜக தலைமையிடம் ஆதரவை திரும்ப பெறும் கடிதத்தை திங்கள்கிழமை (இன்று) தர திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிடுகின்றனர்.
புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. அத்துடன் நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் உள்ளனர். மொத்தமுள்ள 33 எம்எல்ஏக்களில் என்ஆர் காங்கிரஸில் 10, பாஜகவில் 9 பேரும் எம்எல்ஏக்களாக உள்ளனர். சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்ப பெற்றாலும் ஆட்சிக்கு பாதிப்பு ஏதுமில்லை என்று சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5 ஆண்டுகள் நீடிக்கும்
அதே நேரத்தில் ஆதரவு சுயேச்சைகளை சமாதானப்படுத்தும் பணிகளும் பாஜகவில் நடக்கின்றன. இதுபற்றி பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, “நிதி விவகாரத்தை சரி செய்த பின்பு வாரியத்தலைவர் பதவியைத் தருவதாக முதல்வர் கூறியுள்ளார். எம்எல்ஏக்கள், கட்சியினருக்கு வாரியத்தலைவர் பதவி அளிக்கப்படும். கட்சி என்றால் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதை நாங்கள் பேசித் தீர்ப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஒற்றுமையாக நீடிக்கும்” என்று குறிப்பிட்டார்.