விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கைக் காண திரண்டு வந்த பக்தர்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கைக் காண திரண்டு வந்த பக்தர்கள்.
Updated on
2 min read

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உள்ள பழமலைநாதர் எனும் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 3-ம் தேதி முக்கிய நிகழ்வாக தருமபுரம் 27-வது ஆதீனம் குருமகா சன்னிதானம் ல கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி ஆசியுடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

4-ம் தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், 5-ம் தேதி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும், சிவாச்சாரியார்கள் வாசவி மடத்தில் இருந்து விசேஷசந்தி முடித்து ஊர்வலமாக யாகசாலைக்கு வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 6-ம்கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மூலமூர்த்திகளுக்கு நன்னீராட்டு நடைபெற கடம் புறப்பாடு தொடங்கி, காலை 8.15 மணிக்கு குடமுழுக்கும், 5 கோபுரங்களிலும் புனித நீராட்டு முடிந்தது.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடமுழுக்கைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் திரண்டு தரிசனம் செய்தனர். நவீன மின்மோட்டார் மற்றும் நீர் தூவும் இயந்திரங்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன்,பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவசங்கர், விருத்தாசலம்எம்எல்ஏ எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், தொழிலதிபர் அகர்சந்த் ஜெயின் சோர்டியா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

20 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு நடைபெற்றதால் இதனை காண ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் வந்தனர். கடலூர் எஸ்பி சக்திகணேசன் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். குட முழுக்குநிகழ்ச்சியை ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்கரசியும், நாட்டுபுற பாடல் பாடகர் வேல்முருகனும் தொகுத்து வழங்கினர். குடமுழுக்கு ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முத்துராசா மற்றும் குடமுழுக்கு குழுவினர் செய்திருந்தனர்.

4-ம் தேதி நடைபெற்ற 2 மற்றும் 3-ம் கால பூஜையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜவஹர், தலைமைக் குற்றவியல் நீதிபதி பிரபாகரன்,விருத்தாசலம் கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி பிரபாகர், சார்பு நீதிபதி ஜெயசூர்யா, கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, நீதித்துறை நடுவர்கள் ஆனந்த், வெங்கடேஷ்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையடுத்து நேற்று முன் தினம் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் நிறுவனர்   ரவிசங்கர், மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிபுகழேந்தி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், குன்றக்குடி ஆதினம், தருமை ஆதினம், திருவாடுதுறை ஆதினம், கோவை கற்பகம் பல்கலைக்கழக ஜோதிடவியல் துறைத் தலைவர் கே.பி. வித்யாதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

குடமுழுக்கு நிகழ்ச்சியையொட்டி சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றமும், தேச மங்கையர்கரசியின் ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in