

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க, பரிசுப்பொருட்கள் விற்பனையகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள ஈரோடு மாநகராட்சியில் 443 வாக்குச்சாவடிகளும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடிகளும், 42 பேரூ ராட்சிகளில் 655 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. தேர்தலின்போது விதிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்தும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகம் குறித்து கண்காணிப்பதற்கும் மாவட்ட அளவில் 66 பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். பிரச்சாரத்தின் போதுவிதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதோடு, வாகனச்சோதனை நடத்தப்பட்டு, அவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பாத்திரங்கள், சேலை போன்ற துணி வகைகள், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை விநியோகம் செய்ய அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, இவற்றை மொத்தமாக கொள்முதல் செய்பவர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில் சந்தேகத்திடமான சரக்கு வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அதோடு, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்கவும், காவல்துறை உதவியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.