

சென்னை: சென்னை மாநகராட்சி 174-வது வார்டில் போட்டியிடும் 94 வயது கொள்ளுப்பாட்டியால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் கொள்ளுப்பாட்டி சின்னம் கிடைத்தபின் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் ஒரேகட்டமாக வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. சென்னை மாநகராட்சியில் 13-வது மண்டலமான அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 174-வது வார்டில் களமிறங்கியுள்ளார் 94 வயதான காமாட்சி பாட்டி.
பரிசீலனைக்குப்பின் அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடையாறு பகுதியின் முக்கிய அடையாளமாக திகழும் ஆலமரம், பெசன்ட் நகர் கடற்கரையின் அடையாளமான கார்ல் இசுமிட் மெமோரியல், கடல் மற்றும் மீனவர்கள் பகுதி என்பதால் கட்டுமரம் இவற்றில் ஏதாவது ஒன்றை சின்னமாக ஒதுக்குமாறு கேட்டுள்ளார். பெசன்ட்நகர், மைகோ காலனி, 4-வது அவென்யுவில் 40 ஆண்டுகளாக வசிக்கும் காமாட்சி பாட்டி சமூக ஆர்வலராக இருந்து வருகிறார்.
அப்பகுதி மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள காமாட்சி பாட்டி 174-வது வார்டில் போட்டியிடுவதால், அந்த வார்டில் போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். முகநூல், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தீவிர பிரச்சாரம் செய்து வரும் காமாட்சி பாட்டி, சின்னம் கிடைத்தபின் நேரடியாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து காமாட்சி பாட்டி கூறியதாவது: தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. புகார் அளித்தாலும் சரியான நடவடிக்கை இல்லை. அதனால், நம்முடைய பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும் என்பதற்காக தான் நேரடியாக தேர்தலில் போட்டிடுகிறேன். தேர்தலில் நிற்பதற்கு வயது ஒரு தடையில்லை. 94 வயதில் நானே தேர்தலில் நிற்கும்போது, இளைஞர்கள், நடுத்தர வயதினரும் அதிக அளவில் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
மிரட்டல் உள்ளிட்ட எதற்கும் அஞ்சாமல் தைரியமாக தேர்தலில் நிற்க வேண்டும். என்னிடம் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் பேசினார்கள். ஆனால், யாரும் என்னை மிரட்டவில்லை. எங்கள் வார்டு பிரச்சினைகளைத் தீர்க்க நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என சொல்லிவிட்டேன். எனக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள், எனக்காக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேரடி பிரச்சாரத்துக்கு என் கூட வருவதாகச் சொல்லியுள்ளனர்.
இந்த வார்டில் வசதியானவர்கள், படித்தவர்கள், ஏழை மக்கள் வசிக்கின்றனர். தேர்தலில் பலர் வாக்களிப்பது இல்லை. அவர்களிடம் பேசி எனக்கு வாக்குளிக்கும்படி கேட்டு வருகிறேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயமாக எந்த ஓர் அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன். எனக்கு பொருளாதாரத்தில் எந்தப் பிரச்சினை இல்லை. வசதியாக இருக்கிறேன். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே எனது முக்கிய குறிக்கோள் ஆகும்.
மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதையே முழு நேரப் பணியாகச் செய்வேன். வார்டில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் அங்கு வசிப்பவர்களைக் கொண்டு குழு அமைத்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். பெசன்ட் நகர் பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். டெல்லியில் 30 ஆண்டுகள் இருந்துள்ளேன். எனது கணவர் சுப்பிரமணியன் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றினார். அவர் 1991-ம் ஆண்டு காலமாகிவிட்டார். எனக்கு 2 மகன்கள், ஒரு மகள், 6 பேரன், பேத்திகள், 4 கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர். நான் கொள்ளுப் பாட்டி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.