Published : 07 Feb 2022 07:44 AM
Last Updated : 07 Feb 2022 07:44 AM

தமிழகத்தில் ஒருநாள் தாமரை மலர்ந்தே தீரும்: பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை நம்பிக்கை

சென்னை மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, தேர்தல் பரப்புரையை மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தொடங்கி வைத்தார். படம்: பு.க.பிரவீன்

சென்னை: தமிழகத்தில் என்றாவது ஒரு நாள் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

பாஜக குறுகிய காலத்தில் அதிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாகும். பாஜகவில் மிகத் திறமையானவர்களை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக. மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள். புதியவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். களத்துக்கு செல்லும்போது நமக்கு வரவேற்பும் தயாராக உள்ளது. திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

நமது கட்சியின் முக்கியமான மூன்று நோக்கங்கள் கட்சியை வளர்க்க வேண்டும், மக்கள் அளிக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும், நீங்கள் வெற்றி பெற வேண்டும். எப்போதும் இல்லாத அளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் 8 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

அரசு இயந்திரத்தை வைத்து நமது வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்க முயற்சித்தார்கள். அதை மீறி வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி. தமிழகத்தில் என்றாவது ஒரு நாள் தாமரை மலர்ந்தே தீரும். இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அது பொருளாகவோ, நேரமாகவோ, நிம்மதியாகவோ கூட இருக்கலாம். வேட்பாளராக இருக்கும் நீங்கள் கட்சி தொண்டர்களின் பிம்பமாக இருக்கிறீர்கள்.

தமிழகத்தில் ஒரு போலியான அரசியலை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். ஆனால், பாரதிய ஜனதா புதுவிதமான அரசியலை கையில் எடுத்துள்ளது. அதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. 8 மாதத்தில் திமுக சம்பாதித்த கெட்ட பெயர், கடந்த 80 ஆண்டுகளில் எந்த அரசியல் கட்சியும் சம்பாதிக்கவில்லை. மக்கள் நமக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். தமிழகத்தில் மிகப் பெரிய மாற்று சக்தி நாம்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x