

சென்னை: அரசின் இலவச வீடு கிடைக்காத விரக்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத் திறனாளியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் பேசிய நபர் ஒருவர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தொலைப்பேசி அழைப்பை துண்டித்து விட்டார். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் இரு வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் திருப்போரூரில் இருந்து பேசியது தெரியவந்தது. சென்னை போலீஸார் திருப்போரூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். திருப்போரூர் காவல் ஆய்வாளர் லில்லி, உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் திருப்போரூர் சிறுதாவூர் அருகே உள்ள பொருந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் ஐயப்பன் (37) என்பவரை கைது செய்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி என்பது தெரிந்தது. மேலும், தமிழக அரசு இலவச வீடு தர வேண்டுமென 2020-ம் ஆண்டு மனு கொடுத்தும், தற்போது வரை வீடு கிடைக்காததால், விரக்தியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததால் கோயம்பேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.