Published : 07 Feb 2022 09:55 AM
Last Updated : 07 Feb 2022 09:55 AM
முதல்வர் ரங்கசாமி, நடிகர் விஜயுடனான சந்திப்பை அதிமுக விமர்சித்துள்ளது. ஊகங்களுக்கு பதில் தரமாட்டோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்னை சென்று நடிகர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது வழக்கமான சந்திப்பு என்று முதல்வர் குறிப்பிட் டார். தேர்தலில் வென்ற பிறகு பிரதமர் மோடி, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை முதல்வர் ரங்கசாமி சந்திக்காமல் தவிர்த்து வருவதால் ஆளுங்கட்சிகூட்டணியில் குழப்பத்தையும் விமர் சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக, ரங்கசாமியை கடுமையாக விமர்சித்துள்ளது. அதிமுக கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல்வர் ரங்கசாமிக்கு புதுவை மக்கள் மீது அக்கறை இல்லையா? மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் இல்லை. அதிமுக வாக்குபெற்று முதல்வரானவருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து நன்றி தெரிவிக்க கூட வழி தெரியவில்லை. நடிகரை மட்டும் மரியாதை நிமித்தமாக சந்திக்க நேரம் இருக்கிறதா?” என்று கேட்டுள்ளார்.
இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, “நடிகர் விஜய் எம்எல்ஏ அல்ல. உள்ளாட்சித் தேர்தலை பொருத்தவரை ஏற்கெனவே முடிவு செய்துவிட்டோம். சந்திப்பு வழக்கமானதுதான். விஜயை சந்தித்தது சாதாரண நிகழ்வு. விஜயுடனான சந்திப்பில் உள்நோக்கம் இல்லை. என்ஆர் காங்கிரஸ் புதுச்சேரி மாநிலக் கட்சி. தமிழகத்தில் கிடையாது. இதை பெரிதாக எடுக்க வேண்டி யதில்லை” என்று குறிப்பிட்டார்.
ஊகங்களுக்கு பதில் தர முடியாது
அதேநேரத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “முதல்வர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அது தனிப்பட்ட விவகாரம். கூட்டணி தொடர்பாக சந்தித்ததாக முதல்வர் ஏதும் கூறவில்லை. இன்றுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் ரங்கசாமிதான். அரசியல் ரீதியாக சந்தித்தாரா என்ற ஊகங்களுக்கு பதில் தர முடியாது. இவ்விவகாரத்தில் சரியான முடிவு வரட்டும். தலைமை அதன் பிறகு உரிய முடிவு எடுக்கும்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT