

மக்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மோசடி செயல்களில் ஈடுபட்டு வரும் திமுகவை தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, வேலூர், நாகை, திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த 67 வேட் பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசிய தாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள், அறிவித்த திட்டங்களை நிறைவேற்றிய துடன், சொல்லாத பல திட்டங் களையும் அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது.
விவசாயிகள் தற்கொலை பற்றி திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு அமைச்சரவையில் இருந்த கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி உரம் விலை உயர்வுக்குக் காரணமாக இருந்துவிட்டு, அதிமுக அரசு உர விலையை ஏற்றியதுபோல விளம்பரம் செய்வது மோசடியான செயல்.
கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில் 2009-ல் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 1060. அதன்பின் 2010-ல் 541 ஆக இருந்தது. 2014-ம் ஆண்டில் 68 ஆகக் குறைந்துள்ளது. இந்த தற்கொலைகளும் பல குடும்ப பிரச்சினைகளால் ஏற்பட்டதாகும்.
இந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறப் போவதில்லை என்பதும், அதிமுக வேட்பாளர்கள்தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதும் திமுகவினருக்கு நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. இரண்டாம் இடத்துக்குக்கூட வர முடியாது என்கிற பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. எனவேதான் தங்களது வசமுள்ள ஊடகங்கள் வாயிலாக பலவித பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவை அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்ட, ஜோடித்த நாடகங்கள். தங்களை உயர்த்திக் காட்டும் வகையில், இதுபோன்ற நாடகங்களை நடத்துவது மட்டுமல்லாமல், அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக சில இடங்களில் மக்கள் உள்ளனர் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின் றனர். திமுகவினர் சிலரை நிறுத்தி வைத்து, அதிமுக வேட் பாளர்களிடம் கேள்வி கேட்பது போல நாடகமாடி, அந்த பொய்ச் செய்திகளை அவர்களது குடும்ப தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றனர். திமுகவின் இந்த மோசடி பொய்ப் பிரச்சாரம் குறித்து தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
எனவே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களில், திமுகவினர் நடத்தும் நாடகங்களால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. திமுகவினர்தான் ஏமாறப் போகின்றனர். மக்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மோசடி செயல்களில் ஈடுபட்டு வரும் திமுகவை தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பூரண மதுவிலக்கு குறித்து மு.க.ஸ்டாலின், கனி மொழிக்கு பதிலளித்த ஜெய லலிதா, மதுவிலக்கு குறித்து மக்களை திமுக ஏமாற்று வதாகவும், இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதிமுகவில் நமீதா
திரைப்பட நடிகை நமீதா, திரைப்பட இயக்குநர்கள் சக்தி என்.சிதம்பரம், அனுமோகன், சி.ரங்கநாதன், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ஜீவன் சீனிவாசன் உள்ளிட்டோரும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அனைவருக்கும் உறுப்பினர் அட்டைகளை ஜெயலலிதா வழங்கினார்.