

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் இத்தேர்தலில் கவுன்சிலர் வேட்பாளராகக் களம் இறங்கி உள்ளார் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்றத்தில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் 32-வது வார்டில் போட்டியிடு கிறார். இவர் வெற்றி பெற்று நகர்மன்றத் தலைவர் பதவியை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதே குறிக்கோளுடன் திமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கம் மகனும், திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான தங்கம் ரவிக்கண்ணன் 33-வது வார்டில் போட்டியிடுகிறார்.
இந்த வார்டில் கடந்த முறை யாரும் எதிர்த்து போட்டியிடா ததால் தங்கம் ரவிக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டார். இம்முறை இவரை எதிர்த்து இன்பத்தமிழனின் தம்பியும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகியுமான ஆணழகனும் போட்டியிடுகிறார். இதனால், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரை இந்த தடவையும் கைப்பற்றப் போவது அதிமுகவா அல்லது நகரில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வரும் திமுகவா என்கிற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் காணப்படுகிறது.