Published : 30 Apr 2016 03:04 PM
Last Updated : 30 Apr 2016 03:04 PM

5 ஆண்டு அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகள் பின்தங்கிய தமிழகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறது. பின்நோக்கிச் சென்ற தமிழகத்தை திமுக மட்டுமே வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும்’ என கோவை பிரச்சாரக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

கோவை மாவட்டத்தில், திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாப்பம்பட்டி, சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:

ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பின் கடந்த 5 ஆண்டுகளில் நீலகிரியை தவிர வேறு எந்த மாவட்டத்துக்கும் செல்லவில்லை. 16 மணி நேரம் வரை மின்வெட்டு, தொழில், விவசாயம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பாதித்து ஒட்டுமொத்த வளர்ச்சியில் 20-வது மாநிலமாக தமிழகம் பின்தங்கியுள்ளது.

திமுக ஆட்சியில் வெளிநாடு, வெளி மாநில நிறுவனங்கள்கூட தொழில் தொடங்க தமிழகத்தை தேர்ந்தெடுத்தன. அன்று, கோவை ஜொலிக்கும் நட்சத்திரமாக இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் மத்தியப்பிரதேச முதல்வர் சவுகான், கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என மற்ற மாநில முதல்வர்கள், தமிழக தொழில்துறையினரை சந்தித்து அவர்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க அழைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், கோவை வழியாகவே கொடநாட்டுக்குச் செல்லும் ஜெயலலிதா, இங்குள்ள தொழில்துறையினரை சந்தித்துப் பேசியிருக்கிறாரா?.

மக்களுக்கு பல திட்டங்களை செய்துவிட்டதாகக் கூறுகிறார் ஜெயலலிதா. கோவைக்கு மோனோ ரயில் திட்டம் கொண்டு வந்தார்களா? விவசாயிகள் தனி நபர் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தினார்களா? கைத்தறி துறையில் 10 ஆடை அலங்காரப் பூங்கா அமைத்தார்களா? விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்கினார்களா? பல்கலைக்கழகங்கள் தரத்தை உயர்த்த 12 அம்சத் திட்டங்களை நிறைவேற்றினார்களா? தென்னை விவசாயிகள் தனிநபர் வரு மானத்தை 3 மடங்காக உயர்த்தினார்களா? 2023 தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்தினார்களா? மாவட்டம்தோறும் ஐடி பூங்கா, 2016-ல் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 2015-க்குள் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 10 சதவீதமாக்குவது, ஒற்றைச்சாளர முறையில் தொழில்தொடங்க அனுமதிப்பது என புதிய தொழில் கொள்கை திட்டங்களை அறிவித் தார். ஆனால் அவர் எதையுமே செய்து முடிக்கவில்லை. சொன் னதையெல்லாம் செய்துவிட்டதாக வாய் கூசாமல் பொய்களைக் கூறி வருகிறார்.

சொல்லாததை செய்ததாக அவர் கூறுவது ஒருவகையில் உண்மை தான். வீதிக்கு வீதி டாஸ்மாக் கடை களைத் திறந்தது, முன்னறி விப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீரைத் திறந்துவிட்டது என சொல்லாத பலவற்றையும் ஜெயலலிதா செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையை மாற்ற, கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x