Published : 07 Feb 2022 10:48 AM
Last Updated : 07 Feb 2022 10:48 AM

திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தல்

திருச்சி உறையூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய திமுக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மாநகராட்சி 23-வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.சுரேஷ் போட்டியிடுகிறார். இதையடுத்து, அந்த வார்டிலுள்ள திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உறையூரில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்திப் பேசும்போது, “முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் திருச்சி மாநகரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையப் போகிறது. மாநகரப் பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு, புறநகர் பகுதிகளுக்குச் சுற்றுச்சாலைகள், மாநகருக்குள் நெரிசலைத் தீர்க்க உயர்நிலை பாலங்கள், மாநகர எல்லை விரிவாக்கம் என ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவற்றை மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளரும், 27-வது வார்டு திமுக வேட்பாளருமான மு.அன்பழகன், பகுதிச் செயலாளர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் திராவிடமணி, நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட பொதுச் செயலாளர் பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தமிழாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x