Last Updated : 16 Apr, 2016 03:30 PM

 

Published : 16 Apr 2016 03:30 PM
Last Updated : 16 Apr 2016 03:30 PM

தூத்துக்குடியில் கம்யூ., விசி போட்டியில்லை: வேட்பாளர்கள் குறித்து அதிகம் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் விசி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா போட்டியிடும் தொகுதிகள் விபரம் நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது. திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகள் தேமுதிகவுக்கும், தூத்துக்குடி, கோவில்பட்டி தொகுதிகள் மதிமுகவுக்கும், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் தொகுதிகள் தமாகாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.

எதிர்பார்ப்பு வீண்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளைக் கேட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்செந்தூர் தொகுதியை எதிர்பார்த்தனர்.

மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளும், 6 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி என ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் இருந்தனர். ஆனால் மூன்று கட்சிகளுக்கு எந்த தொகுதியும் கிடைக்கவில்லை. இது அந்த கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இந்த தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன், ஏமாற்றத்தை மறந்து கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக முழுமையாக பாடுபடுவோம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வேட்பாளர்கள் யார்?

தொகுதிகள் பங்கீடு முடிந்ததை தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆறுமுகநயினார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமாகா வேட்பாளர்கள்

இதுபோல் ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் தொகுதிகளில் தமாகா சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தமாகாவின் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், விளாத்திகுளம் தொகுதியில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பி.கதிர்வேலுவுக்கு வாய்ப்பிருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x