

வேலூரில் பாஜக கொடி மற்றும் விளம்பர பேனர்களை எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி பாகாயம் காவல் நிலையத்தில் அக்கட்சி சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப்போட்டி யிடுகிறது. வேலூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கார்த்திகேயன் என்பவர் 52-வது வார்டில் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இதேவார்டில் திமுக சார்பில் மகேந்திரன் என்பவரும், அதிமுக சார்பில் பழனி என்பவரும் போட்டி யிடுகின்றனர். இந்நிலையில், சாஸ்திரி நகர், பாலமதி சாலையில் உள்ள மளிகைக் கடை அருகே உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கட்சி அலுவலகம் திறப்பதற்கான ஏற்பாடுகளை வேட்பாளர் கார்த்திகேயன் செய்து வந்தார்.
கட்சி அலுவலகம் திறப்பதை முன்னிட்டு அங்கு கட்சி கொடி கம்பம், விளம்பர பேனர்களை அவர் அங்கு நிறுவியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பாஜக சார்பில் நிறுவப் பட்ட கட்சி விளம்பர பேனர்கள், கொடி கம்பத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதாக கூறப் படுகிறது.
இதையறிந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தி யாயினி தலைமையிலான பாஜக வினர் நேற்று காலை சாஸ்திரி நகர் பகுதியில் குவிந்தனர். பின்னர், பாஜக விளம்பர பேனர்களை தீயிட்டு கொளுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகாயம் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதன்பேரில், பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.