Published : 08 Apr 2016 08:46 AM
Last Updated : 08 Apr 2016 08:46 AM

ஆள்மாறாட்டம் செய்து நகராட்சியில் வேலை: கவுன்சிலர் மனைவி மீது வழக்குப்பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு - ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

ஆள்மாறாட்டம் செய்து பொள் ளாட்சி நகராட்சியி்ல் அரசுப்பணிக்கு சேர்ந்த கவுன்சிலரின் மனைவி மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உண்மையை மறைத்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்ததற்காக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக பொள்ளாச்சி பல்லடம் ரோடு முனிசிபல் காலனியைச் சேர்ந்த ஆர்.பார்வதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:

துடியலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நான் முறைப்படி சாதி மற்றும் கல்வித்தகுதியை பதிவு செய்துள்ளேன். வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தபடி கடந்த 26-10-90ல் பொள்ளாச்சி நகராட்சியில் நடந்த கடைநிலை பெண் ஊழியர் பணிக்கான நேர்முகத் தேர்வி்ல் கலந்து கொண்டேன். ஆனால் அதன்பிறகு எனக்கு எந்த பணி நியமன உத்தரவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 1993-ம் ஆண்டு எனது வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கச் சென்ற போது, எனக்கு ஏற்கெனவே நகராட்சி அலுவலகத்தில் அரசு வேலை வழங்கப்பட்டு விட்டதால், பதிவை புதுப்பிக்க முடியாது எனக்கூறி மறுத்தனர்.

இதுபற்றி நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலரான பழனிச்சாமி, ஆள்மாறாட்டம் செய்து எனது வேலையை அவரது மனைவிக்கு வாங்கிக்கொடுத்த விஷயம் தெரிந்தது. கவுன்சிலர் என்பதால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பி.பார்வதி என்ற தனது மனைவியின் பெயரை ஆர்.பார்வதி என்று மாற்றி ஆவணங்களைத் தயாரித்து முறை கேடு செய்துள்ளார். ஆள்மாறாட்டம் செய்த பி.பார்வதி மீது நடவடிக்கை எடுத்து எனக்கு அந்த வேலையை வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட ஆர்.பார் வதிக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலை யில் இந்த உத்தரவை எதிர்த்து கவுன்சிலர் பழனிச்சாமியின் மனை வியான பி.பார்வதி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ‘‘இந்த வழக்கில் கவுன்சிலரின் மனைவியான பி.பார்வதி, ஆள்மாறாட்டம் செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்த உண்மையை மறைத்து மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள பி.பார்வதிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப் படுகிறது. அவர் இந்த தொகையை மறுவாழ்வு மையத்துக்கு செலுத்த வேண்டும். ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பி.பார்வதி மீது போலீஸார் தகுந்த வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆர்.பார்வதிக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்.26-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x