Published : 06 Feb 2022 05:02 AM
Last Updated : 06 Feb 2022 05:02 AM
சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை (பிப்.7) முதல் நேரடி மற்றும் ஆன்லைன் என கலப்புமுறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றதலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் 24-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, வழக்குகள் காணொலி காட்சி வாயிலாக ஆன்லைனில் விசாரிக்கப்பட்டு வந்தன.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களிலும் வழக்கம்போல நேரடி விசாரணையை தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியிடம் வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவுறுத்தலின்படி பிப்.7-ம் தேதி (நாளை) முதல் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக கலப்பு முறையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
வழக்கறிஞர்கள் நேரடியாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது கரோனா தடுப்பூசி, முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
வழக்கறிஞர்களின் சேம்பர்களை திறந்து கொள்ளலாம். ஆனால் நூலகங்கள், கேன்டீன்களை திறக்க அனுமதி இல்லைஎன்று உயர் நீதிமன்ற தலைமைபதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT