Published : 06 Feb 2022 05:14 AM
Last Updated : 06 Feb 2022 05:14 AM

நீட் விலக்கு கோரும் அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் உறுதி

நீட் விலக்கு கோரி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்போம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் உறுதியளித்துள்ளனர்.

நீட் விலக்கு கோரி தமிழக அரசுசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஆளுநர்ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும், சட்டப்பேரவையைக் கூட்டி, மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது தொடர்பான தீர்மானத்தை முழுமனதோடு நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஆளுநர் இதுவரை திருப்பி அனுப்பியதாக வரலாறு இல்லை. முதல்முறையாக இது நடந்திருக்கிறது. சட்டத்தில் உள்ள விதிகளின் அடிப்படையில் மீண்டும் சட்டப்பேரவையில் தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை முன்வைத்து சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கூறியதாவது:

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சட்ட முன்வடிவை 142 நாட்கள் கிடப்பில் போட்டுவிட்டு, ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். அதற்கு வேலூர் சிஎம்சிமருத்துவக் கல்லூரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுகிறார். அது சிறுபான்மை மக்கள் நலன்சார்ந்த வழக்கு. சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவு என்பது வேறு. இதுதொடர்பாக கேள்வி எழுப்பும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன்.

எம்.சிந்தனைச்செல்வன் (விசிக): தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக குறுகியகால திட்டம், நீண்டகாலத் திட்டங்களை உருவாக்கி அரசு செயல்படுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 131-ன் கீழ்மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நீட் விலக்குமசோதா தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். இந்த விவகாரத்தில் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விசிக ஆதரவாக இருக்கும்.

எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (பாமக): நீட் விலக்கு கோரி பாமகநிறுவனர் ராமதாஸும், முன்னாள்மத்திய அமைச்சர் அன்புமணியும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இக்கோரிக்கைக்காக தமிழக அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர்கள் துணை நிற்பார்கள் என கூட்டத்தில் தெரிவித்திருக்கிறோம்.

டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவு என்பது 8 கோடி மக்களின் உணர்வுசார்ந்தது. அதை ஆளுநர் நிராகரித்திருக்கிறார். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து தரப்பினரையும் இணைத்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மமக): நீட்விவகாரத்தில் ஆளுநர் தன் சொந்தகருத்தைக் கூறி, சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பி இருக்கிறார். தமிழக மாணவர்களுக்கு நீட் விலக்கு கோரி சமூக நீதி அடிப்படையில் போராடுவோம். தேவையில்லாத இந்த ஆளுநர் பதவியை ஒழிக்க முதல்வர் ஒரு இயக்கத்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x