

தருமபுரியில் பாமக சார்பில் நேற்று முன்தினம் மாலை ‘உங்கள் ஊர் உங்கள் அன்புமணி’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டவர்களுடன் அன்புமணி ராமதாஸ் சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள், தேவைகள், குறைகள் உள்ளிட்டவை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அவற்றைக் கேட்டுக் கொண்ட அன்புமணி தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால், இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
பாமக ஆட்சி அமைந்தால் தருமபுரியில் சட்டக் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி தொடங்கப்படும். மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சிக்கு உகந்த வகையில் நீர்ப்பாசன திட்டங்கள் கொண்டு வரப்படும். ஒகேனக்கல் சுற்றுலா தலம் மேம்படுத்தப்படும்.
பாமக எப்போதுமே வளர்ச்சி திட்டங்களை மையப்படுத்திய அரசியலை மட்டுமே செய்து வருகிறது. ஆனால், பல அரசியல் கட்சியினர் நாகரீகமற்ற முறையில் அரசியல் செய்து வருகின்றனர்.
தற்போதைய அரசியல் சூழலில் திமுக தன் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டது. அதனால் தான் சூழ்ச்சி, பேரம் என அக்கட்சி செயல்பட்டு வருகிறது. எதைச் செய்தாலும் வரவிருக்கும் தேர்தலில் அக்கட்சி 3-ம் இடத்துக்கு தள்ளப்படும். தேமுதிக என்ற கட்சி இன்று கரைந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன், தருமபுரி முன்னாள் எம்பி செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.