

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம்நிறைவு பெற்றன. வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. இந்த வேட்புமனுக்கள் பரிசீலனையையொட்டி காஞ்சிபுரம் மாகராட்சி அலுவலகத்தில் ஏராளமான வேட்பாளர்கள், அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 19-வது வார்டில் பாஜக சார்பில் கோமதி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் வேட்புமனு பரிசீலனைக்காக அழைக்கப்பட்டார். அப்போது போலீஸார் வேட்பாளர் மட்டுமேசெல்ல வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் பாஜக நிர்வாகியான இவரது கணவர் உள்ளே செல்ல காவல் துறையினரிடம் அனுமதி கேட்டார். ஆனால் போலீஸார் அனுமதிக்காமல் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்துபாஜக நிர்வாகிகள் காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாஜக சார்பில் 19-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் கோமதியை மட்டும் வேட்புமனு பரிசீலனைக்கு போலீஸார் அனுமதித்தனர். இதனால் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.